date_range 02 Apr, 2020

‘வெடித்து’ எழும் நினைவுகள்!


தீபாவளிக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? ஆம், எங்கள் வீட்டில் தீபாவளியைக் கொண்டாடுவதில்லை. ஆனால், குழந்தைகளுக்கு ஏது வழக்கமும் கட்டுப்பாடும்? 80-களில் வாழ்ந்த எல்லாக் குழந்தைகளையும் போன்றே என்னுடைய குழந்தைப் பருவமும் பேதங்களற்ற பொற்காலமாகவே இருந்தது.

பண்டிகை என்றாலே அப்போது எங்களுக்குக் கொண்டாட்டம்தான். அது எந்த மதத்தைச் சார்ந்த பண்டிகையாக இருந்தாலும் சரி. முதல் காரணம் பள்ளிக்கு விடப்படும் விடுமுறை. அதேநேரம் தீபாவளி ஞாயிற்றுக்கிழமை வந்தாலும்கூட, கொண்டாட்டத்துக்கும் கும்மாளத்துக்கும் எந்தக் குறையும் இருக்காது.

குன்றாத சுவை

என் அம்மாவின் தோழி ஒருவரது வீட்டில்தான் அப்போதைய எனது தீபாவளி நாட்கள் கழியும். அடக்க முடியாத பேரார்வத்தால் தூக்கமற்ற இரவாகவே தீபாவளியின் முந்தைய நாள் பெரும்பாலும் இருக்கும். அதிகாலையில் எங்கோ வெடிக்கப்படும் பட்டாசு ஒலியுடன் அன்றைய பொழுது விடியும். காலை ஏழு மணிக்கெல்லாம் அம்மாவின் தோழி வீட்டுக்குச் சென்றுவிடுவேன். அப்போதே அவர்கள் அனைவரும் புத்தாடை அணிந்து தங்கள் கொண்டாட்டத்தைத் தொடங்கி யிருப்பார்கள். அங்கிருக்கும் பாட்டி எங்களுக்குத் திகட்டத் திகட்ட இனிப்புகளைக் கொடுப்பார்.

இனிப்புகளை வெளியில் வாங்கும் பழக்கம் அப்போது இல்லை. தீபாவளி பட்சணங்கள் வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட காலம். அதிரசமும் மைசூர்பாகும் முறுக்கும் கண்டிப்பாக எல்லா வீடுகளிலும் தயாராகும். தீபாவளி அன்று நான் சாப்பிட்ட அதிரசங்களும் மைசூர்பாகும் ஒரு நாளும் சுவை குன்றியோ சுவையற்றோ இருந்ததாக எனக்கு நினைவில்லை.

இனிப்பு சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது என் கண்கள் அந்த அறையின் ஓரத்தில் திறக்கப்படாமல் இருக்கும் பட்டாசுப் பெட்டியின் மீது நிலைகுத்தி நிற்கும். சிவகாசியிலிருக்கும் அவர்களது உறவினர்கள் ஆண்டுதோறும் பெட்டி பெட்டியாக அவர்களுக்குப் பட்டாசுகளை அனுப்புவது வாடிக்கை.

குழந்தைப் பருவத்தில் பட்டாசு வெடிப்பது ஒருபோதும் சலிக்காது, போதும் என்ற மனமும் வராது. ஆனால், அவர்கள் வீட்டிலோ களைத்துப் போய் சலிப்படையும் அளவுக்குப் பட்டாசுகள் குவிந்து கிடக்கும்.

காலை விருந்தைப் பெரிய வாழை இலையில்தான் பரிமாறுவார்கள். கேசரி, அதிரசம், மைசூர்பாகு, ரவா லட்டு போன்ற இனிப்புகளை முதலில் வைப்பார்கள். பிறகு வடை, முறுக்கு போன்ற கார வகைகள். வடை என்றால் ஒன்றல்ல, மெது வடை, பருப்பு வடை (ஆம வடை), கீரை வடை, வாழைப்பூ வடை எனப் பல வடை வகைகள்.

அதன் பிறகு இட்லியும் வைப்பார்கள். இதையெல்லாம் பார்த்துக் கண்விழி மட்டுமல்லாமல், வயிறும்கூடப் பிதுங்கிவிடும்.

பொட்டு வெடி `ஹேண்ட்ஸ் அப்'

சுருள் பொட்டு வெடியும் துப்பாக்கியும் எல்லோருக்கும் கண்டிப்பாக கொடுப்பார்கள். நாங்கள் முதலில் வெடிக்க ஆரம்பிப்பதும் அதைத்தான். பட்டாசின் மீதான பயம் நீங்கும்வரை எங்களது துப்பாக்கிச் சண்டை தொடரும். `தென்னிந்திய கௌபாய்' நடிகர் ஜெய்சங்கரைப் போன்று ஓடிச் சென்று சுடுவோம், தாவிச் சென்று சுடுவோம், ஓடிச் சட்டென்று திரும்பிச் சுடுவோம், தரையில் படுத்துச் சுடுவோம், தரையில் உருண்டு சுடுவோம்.

துப்பாக்கியில் சுருள் தீர்ந்துவிட்டால், சுருள் தீர்ந்துபோனவரைச் சுற்றிவளைத்து ’ஹேண்ட்ஸ்-அப்’ சொல்லி, தரையில் மண்டியிட வைத்து, பின் வெற்றிக் கும்மாளத்துடன் சுற்றி வந்தது நேற்று நடந்ததுபோலத்தான் உள்ளது. ஆனால், இது நடந்து 35 ஆண்டுகள் ஓடிவிட்டன.

`மிஸ்ஸைல் அட்டாக்' தந்த முடிவு

எட்டாம் வகுப்பு படிக்கும்வரை இந்தக் கொண்டாட்டங்கள் தொடர்ந்தன. அதற்குப் பிறகு கல்லூரி செல்லும்வரை தீபாவளிகள் அமைதியாகவே கழிந்தன. கல்லூரியில் விடுதியில் தங்கிப் படித்தபோது தீபாவளி மீண்டும் பெருத்த கொண்டாட்டமாகத் மாறிவிட்டது. கல்லூரியில் கிடைத்த தீபாவளி அனுபவங்கள், நினைத்த மாத்திரத்தில் எனக்கு நகைப்பை ஏற்படுத்தும்.

கல்லூரிக் காலகட்டத்தில் தொலைக்காட்சி பிரபலமாகி இருந்தது. தீபாவளி அன்று ஒலிபரப்பப்படும் சிறப்பு `ஒளியும் ஒலியும்' பார்க்க, மொத்த விடுதியும் `டிவி’யின் முன்னால் தவமிருக்கும். அப்படியொரு நேரத்தில் எனக்கு முன்னால் இருந்த நண்பனின் நாற்காலிக்கு அடியில் யானை வெடியைக் கொளுத்திப் போட்டதும், அது வெடித்தவுடன் பயத்தில் அலறியபடி அவன் தன்னிலை மறந்து, ஆடை அவிழ்ந்ததைக்கூட உணராமல் ஓடியதும், பின் பயம் தெளிந்து என்னைத் தாக்கத் துரத்தியதும் இன்றும் அழியாத ஞாபகங்கள்.கல்லூரியில் பொறியியல் படித்ததாலோ என்னவோ, ராக்கெட் விடுவதில் அறிவியலைப் புகுத்தி, அந்தக் கொண்டாட்டங் களுக்கு மூடுவிழா நடத்தவும் நாங்களே காரணமானோம். அப்போது தீபாவளியன்று, எந்த ஆண்டு மாணவர்கள் அதிகமாக வெடிக்கிறார்கள் என்ற போட்டி எங்கள் விடுதியில் நடக்கும். முதல் மாடியில் நாங்கள் இருந்தோம். இரண்டாவது மாடியில் இருந்த சீனியர் மாணவர்கள், போட்டி தந்த உற்சாகத்தில் மேலிருந்து எங்களின் மீது வெடியைத் தூக்கிப் போட்டு வெடித்து மகிழ்ந்தனர்.

கீழிருந்து எங்களால் அவர்களின் மீது வெடியைப் தூக்கிப் போட முடியவில்லை. என்ன செய்யலாம் என்று யோசித்ததில் உருவானதுதான் 'மிஸ்ஸைல் அட்டாக்'. யோசனைதான் புதிது, செயல்பாடு மிகவும் எளிதான ஒன்றே.

உடைந்த பி.வி.சி. பைப்புகளுக்குள் ராக்கெட்டுகளைச் செருகிக் குறிபார்த்து விடுவதுதான் அந்த மிஸ்ஸைல் அட்டாக். எங்களது இந்த அட்டாக் சீனியர் மாணவர்களை நிலைகுலைய வைத்தது. மேலிருந்து எகத்தாளமாக வெடியை வீசியவர்கள், பயந்து அறைக்குள் போய் ஒளிந்துகொண்டனர்.

நாங்கள் விட்ட ராக்கெட்டுகளில் ஒன்று, ஆளற்ற அறை ஒன்றின் ஜன்னல் வழியே புகுந்து அங்கிருந்த மெத்தையையும் புத்தகங்களையும் எரித்துவிட்டது. பின்பு விசாரணை, `சஸ்பென்ஷன்' போன்ற சம்பிரதாயங்களுக்குப் பிறகு, விடுதியில் தீபாவளி கொண்டாடுவதற்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டது. அதன் பிறகு எனது தீபாவளிக் கொண்டாட்டங்களும் முடிந்துவிட்டன.

#sriloganathan #diwali #feature

Write your comment

add